அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளை அரசு புறக்கணித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணாஸுடன் சேர்த்து 23 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.
இவர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் வஞ்சிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை. எங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் புறக்கணிக்கப்படுகிறது. இதை கண்டித்து 22 தொகுதிகளில் உண்ணா விரதப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதம் நடைபெறும் தொகுதிகள் மற்றும் தேதிகள் ஆகியவற்றை அறிவித்தார்.
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று கூறிய தினகரன், “பல்வேறு கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். தேர்தல் நேரத்தில் அது குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படையாகவே நடைபெறும். சில கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே தோல்வியடைந்த ஜெயக்குமாரின் சவாலை ஏற்பது என்பது நேர விரயம் மற்றும் மரியாதை குறைவானது என்று தெரிவித்த தினகரன், “அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே எண்ணம். 90 சதவிகித தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஆட்சி இல்லையென்றால் மற்றவர்களும் எங்களிடம் சேர்ந்துவிடுவார்கள்.
முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை. வாய்ப்பு கிடைத்தால் எனக்கு ஆதரவாக இருக்கும் 22 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை முதல்வராக்குவேன். தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வரும்போது அதைப்பற்றி பேசுவோம்” என்று கூறினார்.
“சபரிமலை விவகாரத்தில் கேரள அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து பழைய நடைமுறையை கொண்டுவருவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. பதவியைவிட்டு இறக்கப்பட்டால் ஒழிய அவர் போகமாட்டார் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸும் டிடிவி தினகரனை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 17.12.2018 அன்று திருவாடனை தொகுதியில் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அனைத்துத் தொகுதிகளில் நடைபெறும் உண்ணாவிரதங்களிலும் தான் கலந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.