தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை!

வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய அரசின் நிதியில், மத்திய அரசின் திட்டத்துக்கு அமையவே அந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பெயரையே, ‘அம்மாச்சி உணவகம்’ என்று வடக்கு மாகாண சபை வைத்திருக்கிறது.

ஏனைய எட்டு மாகாணங்களில் சிங்களப் பெயரிலேயே இந்த உணவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கில் அம்மாச்சி என்று இதற்கு பெயர் வைத்திருக்கின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பெயரை வைக்க வேண்டிய அவசியமில்லை. கோண்டாவிலில் இந்த உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயரை 25ஆம் திகதிக்குப் பின் வைக்கலாம்.

அதேபோன்று வடக்கு மாகாணத்தில் இன்னும் பல உணவகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கெல்லாம் அம்மாச்சி என்று தான் வைக்க வேண்டும் என்றில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், 25ஆம் திகதி வடக்கு மாகாணசபையின் அதிகாரம் ஆளுநரின் கைகளுக்கு சென்று விடும்.

இந்த நிலையில் கோண்டாவிலில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்திற்கும் மற்றைய உணவகங்களுக்கும் சிங்கள மொழியில் பெயர் வைக்கப்படலாம் என சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், வடக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தும் வேலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.