வவுனியாவிலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியா மாவட்டத்திலிருந்து தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வட.மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


இதனைத் தடுத்து நிறுத்த வவுனியா தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் மற்றும் அதற்கு முன்னைய ஆட்சிக்காலத்திலும் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் திட்டமிட்ட பல சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது வவுனியாவில் தமிழர்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே நாம் இக்காலப்பகுதியில் உடனடியாகவே எமது இருப்புத் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும்.

இதேபோல் வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு மிகவும் சாதகமான விடயங்களைக் கொண்ட மாவட்டமாகக் காணப்படுகின்றது.

எனவே நாம் இப்போதே எமது மாவட்டம் தொடர்பாகவும், வவுனியாவில் வாழும் தமிழ் மக்களது இருப்புத் தொடர்பாகவும் சிந்தித்துச் செயற்படவேண்டும்” என சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.