வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது -எஸ்.வியாழேந்திரன்!

வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு ஸ்ரீகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானம் எடுத்துள்ளது.

இதைப்போன்று வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் ஆதரவளிக்க முடியாது என தமிழ் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும்.

கடந்த மூன்று வரவுசெலவு திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக கையை உயர்த்தியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வினைத் தரவேண்டும் என்பதற்காகவே அந்த ஆதரவினை வழங்கியது.

இந்த ஆண்டு முடிவதற்குள் காணிகள் விடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான அழுத்தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து வழங்கிவரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் இந்த அரசாங்கம் உடனடியாக தீர்வொன்றினை வழங்கவேண்டும். வரவுசெலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும்போது ஒரு நிரந்தரத் தீர்வினை நோக்கியதாக தமது ஆதரவினை வழங்கவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 #தமிழ்த் தேசிய கூட்டமைப்பு   #அரசியல் கைதிகள்   #எஸ்.வியாழேந்திரன்   #tamilnews   #vilayenthiran   #batticalo   #news

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.