சபரிமலை உரிமை ஆண் கழிவரையில் பெண் உட்காருவது போல!: நடிகர் சாருஹாசன்!

“சபரிமலை விவகாரத்தில் பெண்கள் உரிமை கோருவது, ஆண் கழிவரையில் பெண் உட்காருவது போல” என்று  நடிகர் சாருஹாசன் அதிர்ச்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார்.


பத்து முதல் ஐம்பது வயதிலான பெண்களை சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இதற்கிடையே மூன்று பெண்கள் சபரிமலை சென்றனர். அவர்களுக்கு கேரள காவல்துறை பாதுகாப்பு அளித்தது.  ஆனால் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கலவர சூழல் உருவானது

இதையடுத்து சபரிமலை சென்ற  மூன்று பெண்களை திருப்பி அனுப்புமாறு கேரள காவல்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதன்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் சபரிமலைக்குச் சென்ற ரெஹ்னா என்ற பெண் இஸ்லாமியர் எனவும் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றும் இருவேறு கருத்துக்கள் வெளியாகின. அதே நேரம் அவர் இந்துவாக மதம் மாறிவிட்டதாக அவரது கணவர் தெரிவித்தார். மேலும் பாஜக முக்கிய பிரமுகருடன் ரெஹ்னா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பாஜகவின் பின்னணி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடைய சபரிமலை விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து தேசிய விருது பெற்ற மூத்த நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் தனது முகநூல் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில், “ஒரு தவறான சமத்துவம்………….
சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம்…… பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது., ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்…!!!” என்று சாருஹாசன் பதிவிட்டுள்ளார்.

“நாகரீகமான முற்போக்குவாதி என்று பெயரெடுத்த சாருஹாசனிடம் இருந்து இப்படி ஓர் கருத்தா” என்று பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.