வட சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் மன்னிப்பு!

சமூக அக்கறையின்றி ஆபாச நடை, அனைவரையும் புண்படுத்தும் விதமாக ‘வடசென்னை’ படத்தை எடுத்த வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வெற்றிமாறன் மன்னிப்பு கேட்டார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வட சென்னை பகுதி மக்களை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இருக்கின்றன என்றும் ஆபாச வசனங்கள் மற்றும் வக்கிரக் காட்சிகள் மிகுதியாக உள்ளன,  என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் ’வடசென்னை’ திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“வடசென்னை திரைப்படம் மத்திய திரைப்பட தணிக்கைத் துறையில் ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் முகம் சுளிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  மேலும் சமூக அக்கறையில்லாமல் பார்வையாளர்களின் மனதைப் புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கில் வெற்றிமாறனால் வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் ஆபாச வசனங்கள் பேசுவது, பாடுவது போன்றவை இந்திய தண்டனைச்சட்டம் 1860 பிரிவு 294-ன் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றமாகும். இதுகுறித்து தணிக்கைத்துறை தலைமை அதிகாரிக்கு மின் அஞ்சல் மூலம் விளக்கம் கேட்டு மனு அனுப்பியிருக்கிறேன்.

இதுகுறித்து தாங்கள் விசாரணை நடத்தி பொது இடத்தில் (திரையரங்குகளில்) மக்கள் கேட்கும் வண்ணம் தமிழக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக தவறு என்று தெரிந்தே செய்த இயக்குநர் வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இத்திரைப்படத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வர வாய்ப்பு இருப்பதால்  கடுமையான தண்டனை அளிக்க  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகார் தமிழக முதல்வர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், மத்திய தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கும்  அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே புகார் குறித்து அறிந்த  வெற்றிமாறன் மன்னிப்பு கோரியுள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகள் வட சென்னை படத்தில் இருந்து நீக்கப்படும் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குனர் வெற்றி மாறன்  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.