பாதிரியார் வழக்கு: சாட்சி மர்ம மரணம்!

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரப் புகார் தொடர்பாகப் பேராயராக இருந்த பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான குரியகோஸ் என்பவரது சடலம் இன்று ஜலந்தரில் கைப்பற்றப்பட்டது. இந்த மரணத்தில் சதி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.


கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், கடந்த ஜூன் மாதம் பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் மறைமாவட்டப் பேராயராக இருந்த பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல முறை, அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். பேராயர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தது வாடிகன் நிர்வாகம்.

கடந்த 15ஆம் தேதியன்று, பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம். விசாரணை நடவடிக்கைகள் தவிர, வேறு விஷயங்களுக்காகக் கேரளாவுக்குள் நுழைய அவர் அனுமதி பெற வேண்டுமென்றும் தெரிவித்தது. அக்டோபர் 17ஆம் தேதியன்று, பிராங்கோ முலக்கல் ஜலந்தர் சென்றார். அங்கு அவருக்கு பூத்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிராங்கோவுக்கு எதிராகத் தற்போது கன்னியாஸ்திரி புகார் தெரிவிக்கக் காரணமாக இருந்தவர் பாதிரியர் குரியகோஸ் கட்டுதரா. இந்த வழக்கில் இவர் முக்கியச் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். இது போலப் பல கன்னியாஸ்திரிகள் தன்னிடம் புகார் தெரிவித்ததாகக் கூறியிருந்தார். இதனால் தனக்குப் பல முறை கொலை மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இன்று (அக்டோபர் 22) ஜலந்தர் மாவட்டம் தசூயாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் உள்ள அறையொன்றில் இறந்து கிடந்தார் குரியகோஸ். இவரது வயது 67. இந்த மரணத்தில் சதி இருப்பதாகக் கூறியுள்ளனர் குரியகோஸ் குடும்பத்தினர். இது குறித்து மாத்ருபூமி நியூஸ் இணையதளத்துக்குப் பேட்டியளித்தார் குரியகோஸ் சகோதரர் ஜோஸ் கட்டுதரா. அதில், பிராங்கோ முலக்கலுக்கு எதிராகப் பேசியதனால் தனது சகோதரர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜலந்தர் மறைமாவட்டச் செய்தித் தொடர்பாளரான பாதிரியார் பீட்டர், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். இன்று காலையில் சில கன்னியாஸ்திரிகள் குரியகோஸின் அறைக்குச் சென்றதாகவும், பூட்டப்பட்டிருந்த கதவைத் தட்டியதாகவும், அங்கிருந்த வேறொரு பாதிரியாரை உதவிக்கு அழைத்ததாகவும், அவர்கள் அனைவரும் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது குரியகோஸ் தரையில் விழுந்து கிடந்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், குரியகோஸ் மரணமடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

இந்த செய்தி தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார் கன்னியாஸ்திரி அனுபமா. இவர், பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவர். “குரியகோஸ், எங்களது திருச்சபையின் ஒரு அங்கமாக இருந்தார். பிராங்கோ முலக்கல் வழக்கில் அவர் ஒரு முக்கியமான சாட்சி. அவருடன் நெருங்கிய நட்பில்லை என்றாலும், பிற பாதிரியார்கள் மூலமாகத் தேவாலயத்தில் அவருக்குப் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதாக அறிந்தேன். குரியகோஸின் மர்ம மரணம், பிராங்கோ வழக்கைக் கண்டிப்பாகப் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.