திமுக பொறுப்பாளர்கள் நியமனத்தில் புகைச்சலை !

மக்களவை தேர்தலுக்காக திமுக அறிவித்திருக்கும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


மக்களவை தேர்தல் ஜூரம் மெல்ல மெல்ல தமிழக அரசியல் களத்தை தாக்கத் தொடங்கியிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை மக்களவை தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம் என்பதை அறிவிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் திமுக தலைமை அறிவித்த இந்த பட்டியல் தேர்தல் தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்துவிட்டதாக அதிருப்தி வெளிப்படுகிறது. வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது எப்படி சரியாக வரும்? என்பதுதான் திமுகவினர் முன்வைக்கும் முதல் கேள்வி.

தொகுதி நிலவரம், தொகுதியில் செல்வாக்கான மனிதர்கள், ஜாதிய அமைப்புகள் குறித்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது? வெளியூரில் இருந்து வந்து எப்படி முகாமிட்டு அவர்கள் வேலை பார்க்க முடியும்? அப்படி வெளியூரில் இருந்து வருகின்றவர்கள் சொல்வதை உள்ளூர் நிர்வாகிகள் அத்தனை பேரும் அப்படியே கேட்டு செயல்படுவார்களா? இப்படி நடைமுறைக்கே சாத்தியமற்ற ஒன்றுதான் இந்த அறிவிப்பு என்பது திமுகவினரின் குமுறல்.

அத்துடன் அரசியல் கள நிலவரம், தேர்தல் பணிகள் குறித்து எதுவுமே தெரியாத பலரும் இந்த பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு எதை சாதிக்கப் போகிறது கட்சித் தலைமை? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உள்ளூர் நிர்வாகிகள் தொகுதியிலேயே முகாமிட்டு பணியாற்றினால் 1,000 வாக்குகள் கிடைக்கக் கூடிய இடத்தில் கூடுதலாக சில நூறு வாக்குகளையாவது பெற முடியும் என்கிற இயற்கைக்கு நேர் முரணாகவே தலைமையின் அறிவிப்பு இருக்கிறதே என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கக் கூடிய சில ‘புதியவர்கள்’ இப்போதே ‘என்னுடைய ஸ்டேட்டஸ்’ என்ன தெரியும்தானே? என சீனியர்களிடம் எகிறவும் தொடங்கியிருக்கிறார்களாம்.

வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள், வெற்றி வாய்ப்புக்கு போராடக் கூடிய தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு கட்சிப் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட வேண்டும் எனவும் திமுகவினர் விரும்புகின்றனர்.

No comments

Powered by Blogger.