இருவரையும் பிரிக்க முடியாது: பன்னீர்செல்வம்!

சுனாமியே வந்தாலும் தனக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்திவிட முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இணைந்த நிலையில், பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி நண்பரின் வீட்டில் வைத்து பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கடந்த 5ஆம் தேதி தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் சந்திக்க தூது அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தினகரனுடனான சந்திப்பை உறுதிப்படுத்திய பன்னீர்செல்வம், இது தன்னுடன் இருந்தவர்களுக்குக் கூட தெரியாது என்றார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு, பன்னீர்செல்வத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இருவருக்குமிடையே பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் இன்று (அக்டோபர் 22) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து இல்லத் திருமண நிகழ்வு நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய பன்னீர்செல்வம், “முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்திச் செல்கின்றோம். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை, திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஈடுபட்டுள்ளது. எங்கள் இருவரைப் பொறுத்தவரை அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

எந்தப் பக்கத்திலிருந்து சுனாமி வந்தாலும், எங்களுக்குள் எதிர்க்கட்சிகள் எந்தவித பிரச்னையையும் உருவாக்கிவிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் லட்சியப் பாதையில்தான் எங்களுடைய பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறோம். உள்ளேயும் வெளியேயும் எங்களை ஆட்டவோ அசைக்கவோ யாராவது முயற்சி செய்தால் அது நடக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.