கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம் என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் அனைத்து பகுதி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

1000 ரூபாவுக்கு இந்த பாடா?, காடுமலை ஏறி கால் உதிரமும் கரைந்து போகுது, சுரண்டாதே சுரண்டாதே ஊதியத்தினை சுரண்டாதே, போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருநதனர்.

இதன்போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தேவையான அழுத்தங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாணவர்கள் முன்வைத்தனர்.

இன்று தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் கற்று வருகின்றனர். தினமும் ஐநூறு ரூபாவுக்கு குறைவான சம்பளத்தினைப் பெற்றுக்கொண்டு தமது பிள்ளைகளையும் கற்பித்துக்கொண்டு அன்றாட தேவையினையும் பல்வேறு கஷ்டங்களிலும் பூர்த்திசெய்து வருகின்றனர்.

இன்று இரண்டாயிரம் ரூபாவினை தினம் உழைப்பவர்கள் கூட இன்றைய நிலையினை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தமது குறைந்த சம்பளத்தினைக் கொண்டு தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கையினை கழித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நிலையினை கருத்தில்கொண்டு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments

Powered by Blogger.