தமிழ்த்தலைமைகளின் அபிலாஷைகளை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை: குருபரன்

தமிழ்த்தலைமைகள் தங்களுடைய அரசியல் அபிலாஷைகளைக் குறைத்துக் கொண்டாலும் கூட ,தென்னிலங்கை பேரினவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என யாழ்.பல்கலைக்கழக சட்டபீடத் தலைவர் கு.குருபரன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த தேர்தல்களில் தமிழர்களின் வாக்களிப்பு முறையானது தமிழ் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலிற்கு எதிராக ஓர் செய்தியினைச் சொல்லுகின்ற விடயமாகவே இருந்துள்ளது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெறும் தேர்தல்களில் தமிழ்மக்கள் என்ன கொள்கையில் நிற்கின்றார்கள் என்பது அல்லது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் என்ன நிகழ்ச்சி நிரலினை வைத்திருக்கின்றார்கள் என்பது முக்கியமான விடயமாகும்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தென்னிலங்கை அரசின் தமிழ் அரசியல் தொடர்பான நிகழ்ச்சி நிரலானது தமிழ்த் தேசிய சிந்தனை அகற்றல் எனும் பதத்தினூடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே கடந்த அரசு தமிழ்த் தேசிய சிந்தனை அகற்றலை ஒடுக்குமுறைகளாலும், இப்போதைய அரசு தமிழ்த்தலைமைகளை வைத்தும் செயற்படுத்துகின்றது.

மேலும் தென்னிலங்கையின் மிதவாத அரசியல் போக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய தமக்கான அரசியல் அபிலாஷைகளைப் படிப்படியாகப் பெற்றுக் கொள்ள முடியுமென தமிழ்த் தலைமைகள் கூறி வருகின்றனர்.

ஆனாலும் இதன் இறுதிக்கட்டத்தில் கூட தமிழர்களுக்கு சிங்களப் பௌத்த பேரினவாதம் எதனையும் வழங்கத் தயாராக இல்லை என்பதே உண்மை” என குருபரன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.