கச்சா எண்ணெய்: அதிகரிக்கும் செலவுகள்!

இந்த நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒரு அங்கமான பெட்ரோலியம் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல் அமைப்பின் மதிப்பீடுகளின் படி, இந்த நிதியாண்டில் மொத்தம் 125 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 2017-18 நிதியாண்டில் கச்சா எண்ணெய்க்கான இறக்குமதிச் செலவுகள் 88 பில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் இந்த ஆண்டில் 42 சதவிகிதம் செலவுகள் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சியில் அதிகபட்ச இறக்குமதிச் செலவுகளை இந்த நிதியாண்டில் இந்தியா சந்திக்கவுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலராக உயர்ந்துள்ளது. அதேநேரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால் சுமை இன்னும் அதிகரித்துள்ளது. பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில் வரவுள்ளதால் அரசின் செலவுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய்க்கான இறக்குமதிச் செலவுகள் அரசுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. மேலே மதிப்பிட்டதின் படி, 125 பில்லியன் டாலர் என்பது தோராயமான மதிப்பீடுதான் எனவும், இச்செலவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், எண்ணெய் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.