ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா?

அமைச்சர் ஜெயக்குமார் மரபணு சோதனைக்குத் தயாரா என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.


மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண் தொடர்பான சர்ச்சை வலையில் சிக்கியிருப்பது பற்றிய செய்தி தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அமைச்சருடன் பெண் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழில் டி.ஜெயக்குமார் என்ற பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர், ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்றும், சசிகலா குடும்பம், தினகரனைச் சார்ந்தோர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர் என்றும் இந்த ஆடியோ தொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 23) செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், “ஆடியோவை நான் வெளியிடவில்லை. அவருக்கு எதிராக ஆடியோ தயாரிக்க வேண்டிய அவசியமும் எங்களுக்குக் கிடையாது. ஆடியோவை வெளியிட்டது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது அவர்கள்தான். அந்தப் பெண்ணின் வீட்டு முகவரி உள்ளது, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் உள்ளது. அங்கு உண்மையிலேயே குழந்தை இருந்ததென்றால் மரபணு சோதனை செய்யச் சொல்லுங்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்தான், குற்றமற்றவன் என்று நிரூபணம் செய்ய வேண்டும்.

உண்மையை நிரூபணம் செய்ய வேண்டுமெனில் ஜெயக்குமாரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். நான் குற்றம்சாட்டவில்லை. ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மை. என்னிடம் ஆடியோ இருக்கிறது என்றோ அதனை வெளியிடுவேன் என்றோ சொல்லவில்லை. என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும், ஆனால் அதனை ரிலீஸ் செய்ய மாட்டேன்” என்று தெரிவித்தார்.

“இதுபோன்ற தவறுகளை அவர் எத்தனை பெண்களிடம் இழைத்திருக்கிறார் என்ற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஜெயக்குமார், அந்தப் பெண்ணை அங்கு அழைத்து திண்டுக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் ரூம் போட்டு, திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். ஜெயக்குமார் மாபியா கும்பலிடம் மாட்டவில்லை. மாமியார் கும்பலிடம்தான் மாட்டிக் கொண்டுள்ளார்” என்று விமர்சித்த வெற்றிவேல்,

சிபாரிசுக்காகச் சென்ற அந்த பெண்ணுக்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் வல்லுறவு செய்துள்ளார். இது அந்தப் பெண்ணின் தாயாருக்குத் தெரிந்தவுடன், ‘உங்கள் மகளைத் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அமைச்சர் வாக்கு கொடுத்திருக்கிறார். இதன்பிறகு, பல முறை அந்த பெண்ணுடன் அவர் ஒன்றாக இருந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தை தன்னுடையதல்ல என்றாரா

குரல் தன்னுடையதல்ல என்றுதான் ஜெயக்குமார் கூறியுள்ளார். குழந்தை தன்னுடையதல்ல என்று கூறியுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் ஜெயக்குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் கூற தைரியம் வரும். ஆளுநர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அமைச்சர் ஜெயக்குமாரிடமிருந்து அந்தப் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்த பெண்ணுக்கோ குழந்தைக்கோ ஆபத்து வந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறிய வெற்றிவேல், அமைச்சர் ஜெயக்குமார் போல 10 நிமிடங்கள் யாராவது மிமிக்ரி செய்ய முடியுமா என்று கேள்வியும் எழுப்பினார்.

அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். ஆடியோ பின்னணியில் இருப்பவர்களை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று ஜெயகுமார் கூறியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.