ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு!

செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஜூலை - செப்டம்பர் மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை கவுன்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இக்காலாண்டில் மொத்தம் 8.8 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் பாதி அளவு போன்கள் ஸ்மார்ட்போன்களாகும். அதாவது இக்காலாண்டில் மொத்தம் 4.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.க்ஷியோமி, சாம்சங், விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவு மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளன. அதிகபட்சமாக க்ஷியோமி நிறுவனம் 27 சதவிகித சந்தைப் பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது. சாம்சங் நிறுவனம் 23 சதவிகித பங்குடன் இரண்டாம் இடத்திலும், விவோ 10 சதவிகித சந்தைப் பங்குடன் மூன்றாம் இடத்திலும், மைக்ரோமேக்ஸ் 9 சதவிகித சந்தைப் பங்குடன் நான்காம் இடத்திலும் இருக்கின்றன.

பண்டிகை சீசனை முன்னிட்டு சிறப்புச் சலுகைகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாலும், ஆகஸ்ட் மாதத்திலேயே புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் விற்பனை அதிகரித்திருப்பதாக கவுன்ட்டர் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வாளரான அன்சிகா ஜெயின் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் அவர் மேலும் பேசுகையில், “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்த சமயத்தில்தான் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. இது ஏற்கெனவே விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பண்டிகை சீசன் முடிந்த பிறகு விலை உயர்வு மீண்டும் மேற்கொள்ளப்படும்போது வாடிக்கையாளர்களிடையே அழுத்தம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.