சபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை!

சபரிமலை நிலவரம் தொடர்பாக, இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சிறப்பு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இதில், அடுத்த மாதம் கூட்டம் அதிகரிக்கும்போது போராட்டம் நடந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் புதன்கிழமையன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின், ஐந்து நாட்கள் ஐயப்ப பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர். 10 முதல் 50 வயதுக்குட்பட்ட சுமார் 12 பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தனர். ஆனால், இளம்பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஐயப்ப பக்தர்கள் சிலர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் இவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சபரிமலை கோயில் சன்னிதானத்திலும் சிலர் போராட்டம் செய்தனர். இவர்களது எதிர்ப்பினால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டும் எந்தவொரு இளம்பெண்ணாலும் சபரிமலை கோயில் படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை.

நேற்று (அக்டோபர் 22) இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. கடந்த ஒரு வார காலமாகச் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக 16க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் அம்மாநிலக் காவல் துறை சிறப்பு ஆணையர் எம்.மனோஜ். தற்போது நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல, வரும் நவம்பர் மாதமும் நடைபெற்றால் சிக்கல் அதிகமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அடுத்த மாதம் கோயில் நடை திறக்கப்படும்போது, அதிகளவில் கூட்டம் வரும்; அதிக வேட்கை கொண்ட பக்தர்களும் போராட்டக்காரர்களும் போராட்டம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். இதனால், அங்கு கொந்தளிப்பு ஏற்படலாம்; கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் காயமுறலாம்: பக்தர்கள், காவல் துறையினர் மற்றும் மற்ற துறை சார்ந்தவர்களின் மரணம் கூட நிகழலாம்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது நடந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது, சில அரசியல் செயல்பாட்டாளர்களும் குற்றவாளிகள் சிலரும் சபரிமலை பகுதியில் முகாமிட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மண்டல பூஜையையொட்டி அதிகளவில் கூட்டம் வரும் என்பதால், சபரிமலை மற்றும் பம்பா, நிலக்கல், எரிமேலி பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.