மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள் தனது ஒப்புதலுடனேயே எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தில், உறுப்பினர் சேர்க்கும் பணிகளும், அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கும் வேலைகளும் படுவேகமாக நடைபெற்று வருகிறது. மன்ற நடவடிக்கைகளில் சரியாக ஈடுபடாத நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிக்குத் தெரியாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இதற்கிடையே பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். மேலும் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
இதன் பின்னணியில் மன்றத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 23) வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில், “மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. நம் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வர வேண்டாம் என்று அறிக்கையில் கூறியுள்ள ரஜினிகாந்த், “மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காகப் பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது என்றும், சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொதுமக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
“அப்படி பொதுமக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையைத் தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களைச் செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டவர்களைத் தான் மன்றத்திலிருந்து நீக்கி இருக்கிறோம்” என்று விளக்கமும் அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.