பத்தாயிரத்தில் இணைந்தார் கோலி!

இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக 10000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது.
முதல் போட்டியில் இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணி இதில் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ஷிகர் தவனும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். முதல் போட்டியில் 150+ ரன்கள் சேர்த்து எதிரணியைக் களங்கடித்த ரோஹித் இதில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கேமர் ரோச் பந்துவீச்சில் ஷிம்ரன் ஹெட்மயர் கையில் கேட்ச் ஆனார். அதன் பின்னர் ஷிகர் தவனும் 29 ரன்களில் ஆஷ்லே நர்ஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி அவுட் ஆக விராட் கோலி, அம்பத்தி ராயுடு எனும் பார்ட்னர்ஷிப் உருவானது.
நேர்த்தியாகவும் சராசரியான ரன் ரேட்டுடனும் அணியின் ஸ்கோரை நகர்த்தி சென்ற இந்த பார்ட்னர்ஷிப் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை ரொம்பவே எளிதாக எதிர்கொண்டது. அரை சதத்தைக் கடந்த ராயுடு, 73 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் குறித்த விவாதம் போலவே கோலி, தோனி இருவரில் யார் முதலில் 10000 ரன்களைக் கடக்கப்போவது எனும் விவாதமும் இந்தப் போட்டியில் எழுந்தது. அந்த சாதனையை முதலில் நிகழ்த்தினார் கோலி.
இதன் வாயிலாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தரப்பில் 10,000 ரன்கள் சேர்த்தவர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் வரிசையில் இணைந்தார் கோலி. தோனியும் இந்த சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 20 ரன்களிலேயே அவுட் ஆகி வெளியேறினார் தோனி. (ஒருநாள் போட்டிகளின் மொத்த ரன்களைக் கணக்கிட்டால் தோனியும் 10000 ரன்களைக் குவித்திருக்கிறார். ஆனால் அதில் 174 ரன்கள் ஆசிய லெவன் அணிக்காக அவர் சேர்த்தவை ஆகும். எனவே இந்திய அணியின் ரன் கணக்கில் அது சேராது.)
அதன்பின்னர் வந்த ரிஷப் பந்த் 17, ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுக்க மறுமுனையில் வெளுத்து வாங்கிய கோலி ஆட்டமிழக்காமல் 157 ரன்களைக் குவித்தார்.
இதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் சச்சினிடம் இருந்து பறித்தார் கோலி. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 1573 ரன்கள் அந்த அணிக்கு எதிராகக் குவித்திருந்தார். தனது 37ஆவது சதத்தை பதிவு செய்த கோலி அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கிபாண்டிங்கை முந்தி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆட்ட நேர முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 321 ரன்களைக் குவித்தது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடிவருகிறது.

No comments

Powered by Blogger.