ஜெயக்குமார் விசாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அதிமுகவின் ரிங் மாஸ்டராக டெல்லியில் உள்ள மோடி உள்ளார். அதிமுக சர்க்கஸ் கூடாரமாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “திமுகவின் ரிங் மாஸ்டராக அமித் ஷா உள்ளது. அமித் ஷாவை பயன்படுத்தி சிபிஐ மூலம் அதிமுகவுக்கு திமுக அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் இன்று (அக்டோபர் 24) செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “சர்க்கஸ் நடத்துவதற்கு திறமை வேண்டும் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலளித்திருந்தார். மோடியை ரிங் மாஸ்டர் என்று அவர் கூறியது கண்டனத்துக்கு உரியது. அதேபோல், திமுகவின் ரிங் மாஸ்டர் என்று அமித் ஷாவை தம்பிதுரை கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை மோடியும் அமித் ஷாவும் கிங் மாஸ்டர்கள். இந்தியாவையே அவர்கள் வழி நடத்திகொண்டு இருக்கிறார்கள். தான் பொறுப்பேற்பதற்கு முன்பாக 4 மாநிலங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த பாஜகவை 22 மாநிலங்களில் ஆட்சி செய்ய வைத்திருக்கும் கிங் மாஸ்டர் அமித் ஷா.
காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியில் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொடுத்து ஆட்சியை நிறைவு செய்ய முடியும் என நிரூபித்து வருகிறார் கிங் மாஸ்டராக உள்ள மோடி” என்று தெரிவித்தார்.
மேலும், “பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். மேலும், விசாரணைக்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயக்குமார் விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் குற்றமற்றவரா இல்லை பிரச்னை உள்ளதா என்பதை வெளிக்கொணர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.