சபரிமலை, முல்லை பெரியாறு.. கேரளாவுக்காக 'மல்லுக்கட்டும்’ பாஜக!

தென்னிந்திய மாநிலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாஜக ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் வாழ்வா? சாவா? போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் ஓரளவு செல்வாக்கை பெற்றுவிட்ட பாஜக கடந்த சில ஆண்டுகளாக கேரளாவை குறிவைத்து வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெறும் 6% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பாஜக 2016 தேர்தலில் 16% வாக்குகளைப் பெற்று முன்னேறியிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் இனிவரும் தேர்தல்களில் கேரளாவில் ஆளும் இடது முன்னணிக்கு போட்டியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
காங்கிரஸும் பாஜகவும்
2006 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 24.09% வாக்குகளைப் பெற்றது. பாஜகவுக்கு வெறும் 4.75% வாக்குகளே கிடைத்தன. 2011 தேர்தலில் காங்கிரஸுக்கு 26.4%; பாஜகவுக்கு 6.03% வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் 2016 தேர்தல் நிலவரம் காங்கிரஸுக்கு அதிர்ச்சியைத் தந்தது.
2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் வாக்கு வங்கியானது 23.7% ஆக குறைந்தது. ஆனால் பாஜகவின் வாக்கு வங்கியோ 10%-க்கும் மேல் அதிகரித்து 16%ஐ தொட்டது. அத்துடன் பாஜக 7 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்தது. பாஜகவின் இந்த பாய்ச்சல் தொடரும் நிலையில் அடுத்த தேர்தலில் 20% வாக்குகளைக் கடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றே தெரிகிறது.
2011 தேர்தலில் பாஜக வியூகம்
கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸ் அணியும் மட்டுமே என இரு துருவ அரசியல்தான் இத்தனை ஆண்டுகாலமாக இருந்து வந்தன. 2016-ம் ஆண்டு தேர்தலில் ஒரு தொகுதியில் வென்று பாஜக கேரளாவில் கணக்கை தொடங்கியது.
2016 தேர்தலில் பாஜக இந்துத்துவா வாக்குகளை குறிவைத்து வியூகங்களை வகுத்தது. இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்து வரும் ஈழவா சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் அச்சமூகத்தின் மிக முக்கிய அமைப்பான ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவர் வெள்ளாபள்ளி நடேசனை வளைத்துப் போட்டது பாஜக. அவரை தனிக்கட்சி தொடங்க வைத்து ஈழவா வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது பாஜகவின் கணக்காக இருந்தது.
அதேபோல் நாயர் சமூகத்தின் வாக்குகளுக்கும் குறிவைத்தது பாஜக. இவர்களுடன் மாதா அமிர்தானந்தமயின் சீடர்களை ஒட்டுமொத்தமாக பாஜக களமிறக்கியது.
இப்படி இந்துக்களின் வாக்குகள் எந்த வகையிலும் சிதறிவிடக் கூடாது என கணக்கிட்டு காய்களை பாஜக நகர்த்தியது. ஆனால் ஈழவா சமூகத்தின் வாக்குகள் எதிர்பார்த்தபடி பாஜகவுக்கு கிடைக்கவில்லை. நாயர் சமூகத்தின் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு கிடைத்தன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 2016 தேர்தல் நிச்சயம் ஏறுமுகம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சபரிமலை விவகாரம்
இந்த நிலையில் இன்னமும் தீவிர முயற்சி செய்தால் கேரளாவில் வலுப்பெற்றுவிடலாம் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு. இதற்காகவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக கேரளாவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
இச்சூழலில்தான் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிறது. இதை விட்டுவிடுமா பாஜக? இத்தனைக்கும் பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என முதலில் கோரிக்கை எழுப்பியதும் வழக்கு தொடர்ந்ததும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான்.
இதனால் சபரிமலை வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு செப்டம்பர் 28-ல் வெளியான சில நாட்களில் பாஜக சற்று தயக்கம் காட்டியது. ஆனால் பாஜக சார்பு அமைப்புகள் பெண்களை களமிறக்கி போராட்டங்களை நடத்தத் தொடங்கியது. இதனால் வேறுவழியில்லாமல் இந்து வாக்கு வங்கியை குறிவைத்து முழு வீச்சில் பாஜகவும் அதன் அத்தனை சார்பு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.
ஒட்டுமொத்தமாக சபரிமலை யாத்திரையை பெரும் பதற்றத்துக்குள்ளாக்கி இந்துக்களை ஓரணியில் திரட்டியதில் பாஜக வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். இதனால்தான் சபரிமலையை போர்க்களமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்., பாஜக சதி செய்கின்றன என பகிரங்கமாகவே முதல்வர் பினராயி விஜயன் சாடியிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு
சபரிமலையில் நடை சாத்தப்பட்டு பதற்றம் தணியத் தொடங்குவதற்குள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பாஜக கிளப்பிவிட்டிருக்கிறது. கேரளாவின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டுவதற்கு நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
பீர்மேடு பகுதியில் அமைய இருக்கும் இந்த புதிய அணையுடன் சிறிய மற்றொரு அணையும் கட்டவும் மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இந்த அணைகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை படிப்படியாக இடிக்கப்பட இருக்கிறது. இதனால் கேரளா மக்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இது அப்பட்டமாக பாஜகவின் தேர்தல் வியூகம் என்பதில் சந்தேகம் இல்லை.
பிற மாநிலங்களில் செல்வாக்கான கட்சிகளின் பெருந்தலைகளை வளைத்துப் போடுவது அல்லது கட்சிகளையே கபளீகரம் செய்வது என்கிற உத்தியை பாஜக கடைபிடித்து வருகிறது. இவற்றுடன் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு எங்கெல்லாம் வாக்குகளை அறுவடை செய்ய முடியுமோ அங்கெல்லாம் கைவரிசையை பாஜக கைகட்டி வருவதும் வாடிக்கைதான். தமிழகத்தில் பாஜகவின் இந்த போக்கு ஒரு விழுக்காடு கூட எடுபடவில்லை. ஆனால் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் கேரளாவில் நிச்சயம் கை கொடுத்துவிடும் என தவிப்பில் இருக்கிறது பாஜக.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.