சிபிஐயின் இயக்குனர் கண்காணிப்பு!

கட்டாய விடுப்பில் பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவின் வீட்டை ரகசியமாக நோட்டமிட்ட உளவுத்துறையினர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர்

விடுவிக்கபட்டனர் என டெல்லி போலீசார் (அக்-25) தெரிவித்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்னதாக சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர்களுக்கிடையில் நடந்த மோதல் உச்ச கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து இருவரும் பதவியிலிருந்து கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரு இயக்குனர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வந்த வழக்குகளின் கோப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிபிஐ அலுவலக கட்டடத்திலிருந்த இரு இயக்குனா்களின் அலுவலகங்கள் சோதனை இடப்பட்டு அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டன. சிபிஐ அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது
ரஃபேல் ஹெலிகாப்டர் ஊழலை விசாரித்து வந்த அலோக் வர்மாவை தடுக்கவே அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டார். அவர் அந்த வழக்கு தொடர்பாக சேகரித்து வந்த ஆவணங்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அவர் பதவியிலிருந்து விடுப்பில் அனுப்பப்பட்ட ஒரு நாளுக்குள் அவரின் வீட்டைக் கண்காணிக்க உளவுத்துறையினரை அனுப்பியது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில் உளவுத்துறையைச் சேர்ந்த 4 பேர் அலோக் வர்மாவின் வீட்டைச்சுற்றி சந்தேகப்படும் முறையில் நடமாடிக்கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் நடந்தபோது வர்மா அவரது வீட்டில் இருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில், இது போன்று உளவுத்துறையினர் முக்கியமான பகுதிகளில் ரோந்து வருவது வழக்கமான ஒன்று என்று கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.