பாலியல் புகார்: இசைக் கலைஞர்கள் மீது நடவடிக்கை!

பாலியல் புகார்கள் திரைத் துறையைப் போலவே இசைத் துறையில் இருந்தும் அதிகளவில் வெளிவந்தன. இந்நிலையில் சென்னை சங்கீத அகாடமி குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்களை மார்கழி மாதம் நடைபெறும் இசை விழா நிகழ்விலிருந்து நீக்கியுள்ளது.


மார்கழி இசை விழா, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. கர்நாடக இசை, நடன ரசிகர்கள் திரளாகக் கலந்துகொள்வர். பாலியல் புகார்களில் சிக்கியுள்ள ஓ.எஸ்.தியாகராஜன், என்.ரவிக்கிரன், மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகிய ஏழு பேரும் இந்த ஆண்டு நிகழ்ச்சிகளில் பங்குபெற முடியாது என்று சங்கீத அகாடமியின் தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முரளி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் மீ டூ மூவ்மெண்ட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கலைஞர்கள் மேல் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எங்கள் உறுப்பினர்களிடம் விவாதித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். நம்மைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை ஆனால் யாரை நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்யலாம் யாரை நீக்கலாம் என்று எங்களால் முடிவு எடுக்கமுடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலியல் புகார்களுக்கு ஓ.எஸ்.தியாகராஜன், ரவிக்கிரண் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.