சர்கார்: தடை விதிக்க மறுப்பு!

சர்கார் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


சர்கார் படத்தின் கதையும் திரைக்கதையும் தன்னுடையவை எனக் கூறி சென்னையை சேர்ந்த எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “என்னுடைய கதையில் சட்ட மாணவன் ஒருவன் வாக்களிக்கச் செல்லும்போது அவனுடைய வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்ததாகவும், அதனை எதிர்த்து அவன் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுவதாகவும் கதை எழுதி இருந்தேன். அதே கதையை இயக்குநர் முருகதாஸ் சில மாற்றங்களுடன் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வாக்கை மற்றவர்கள் பதிவு செய்ததை எதிர்த்து, போட்டியிட்டு வெற்றி பெறுவது போன்று அமைத்துள்ளார்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “சர்கார் படத்தின் கதையில் தன்னுடைய பெயரையும் இணைக்க வேண்டும். என்னுடைய கதைக்காக 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்றும் “இந்த வழக்கு முடியும் வரை சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்றும் மனுவில் தெரிவித்திருந்தார் வருண் ராஜேந்திரன்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், படத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்கப் படத் தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைக்கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்கார் பிரச்சினையில் படக்குழு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறது. எப்படி இருந்தாலும் பிரச்சினைகளைக் கடந்து சர்கார் திரைப்படத்தை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்பதால், வருண் ராஜேந்திரன் விவகாரத்தை முருகதாஸ் தரப்பிலிருந்தே முடித்துவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். முருகதாஸுக்கு பேசிய சம்பளப் பணத்திலேயே கதை திருட்டு விவகாரத்தில் கேட்கப்படும் நஷ்ட ஈடு தொகையைக் கொடுத்துவிடவும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
கதைத் திருட்டு விவகாரம் ஒரு முடிவுக்கு வரவே, அடுத்தகட்ட பணிகளை வேகமாகத் தொடங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தீபாவளிக்கு முந்தய வாரக் கடைசியிலேயே(நவம்பர் 2) வெளியாகும் என வெளியான தகவல்களை புறக்கணித்து, ‘நவம்பர் 6ஆம் தேதி திட்டமிட்டபடி சர்கார் வெளியாகும்’ என சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. இயக்குநர் முருகதாஸும் ‘வதந்திகளை நம்ப வேண்டாம். சர்கார் நவம்பர் 6இல் ரிலீஸ்’ என ஒரு ட்வீட்டைத் தட்டிவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சர்கார் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படக்குழு அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.