மூன்றாம் தரப்போடு தகவல்களைப் பகிரும் Android கைத்தொலைபேசி செயலிகள்!

Android கைத்தொலைபேசிகளில் பெரும்பாலானவை, செயலிகளில் பதிவாகும் தகவல்களை Google நிறுவனத்தோடு பகிர்ந்துகொள்வதாய் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


சுமார் ஒரு மில்லியன் Android ரகக் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் செயலிகள் ஆராயப்பட்டன.

பத்தில் 9 செயலிகள் Googleஉடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.

ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் Play Storeஇல் உள்ள செயலிகளில் மூன்றில் ஒரு பங்கினை ஆராய்ந்தனர்.

அவற்றுள் ஐந்தில் ஒரு செயலி 20க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பினரோடு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சங்களைக் கொண்டுள்ளன என்று தெரியவந்தது.

இப்போது பெரும்பாலான செயலிகள் விற்பனையைவிட விளம்பரங்களையே சார்ந்து லாபம் ஈட்டுவதாக ஆய்வை வழிநடத்திய திரு ரூபன் பின்ஸ் (Reuben Binns) கூறினார்.

பயனீட்டாளர்கள், செயலி மேம்பாட்டாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்குத் தகவல் பரிமாற்றம் குறித்த விவரங்கள் சரியாகத் தெரியாமல் போகலாம் என்றார் திரு பின்ஸ்.

தனிநபரின் வயது, அவர் இருக்கும் இடம், அருகில் உள்ள கம்பியில்லா இணையத் தொடர்புகள், கைத்தொலைபேசித் தொடர்புகள், பிற செயலிகளில் உள்ள தகவல்கள் போன்றவற்றை மூன்றாம் தரப்புகள் சேகரிக்கலாம்.

கடந்த பத்தாண்டுகளில் சுமார் 10 மில்லியன் செயலிகள் அறிமுகம் கண்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, Play storeஇல் 2.8 மில்லியன் செயலிகள் உள்ளன.

செயலிகள் தொடர்பில் நடக்கும் தகவல் பகிர்வு குறித்துத் தனிநபர்கள் தெரிந்துகொள்வது மிக அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.