துரோகிகளுக்குத் தகுந்த பாடம்: எடப்பாடி!


கெட்டவர்களுக்கும் துரோகிகளுக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் போன்றவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோவையில் ’உயிர்’ என்னும் அமைப்பைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(அக்டோபர் 27) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் விபத்தில்லா மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முடியும். அதற்கு இந்த அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம், 4.60 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்துவதற்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது.மக்கள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் போன்றவற்றைக் கண்டிப்பாக அணிய வேண்டும். விதிமுறைகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வதாலே விபத்துக்கள் நடக்கின்றன” என தெரிவித்தார்.

பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, மீண்டும் ராஜபக்சே ஆட்சியில் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்ல வாய்ப்பு ஏற்படாதா, இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ”தமிழக மீனவர்கள் காக்கப்பட வேண்டும். இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போது, பிரதமரிடம் கோரிக்கை விடுத்துப் பல மீனவர்களை விடுவித்திருக்கிறோம். அதுமட்டுமின்றி பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், மீனவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைத்து வருகிறேன்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மக்கள் வசிக்கும் இடங்களில் வன விலங்குகள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வந்த நிலையில் திமுகதான் தடையாணை பெற்றதாக முதல்வர் குற்றம்சாட்டினார்.

தினகரன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “தினகரன் என்ன மகானா? அவர் அதிமுக உறுப்பினரே இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் 10 ஆண்டுகளாகக் காணாமல் போனார். பின்னர் அவர் குறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும். நிருபர்களாகிய நீங்கள் பரபரப்பு செய்தி தேவைப்பட்டால் அவரை பற்றி செய்தி போட்டுக் கொள்கிறீர்கள் ”என்று விமர்சித்தார்.

அதிமுக தொண்டர்கள் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுவார்கள் என்று கூறிய முதல்வர், 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவிட்டது, இனி ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார். 20 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தலைச் சந்திக்க அதிமுக தயார் என்றும் கெட்டவர்களுக்கும் துரோகிகளுக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு தகுந்த பாடம் புகட்டியுள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
#Tamilnews  #Tamil  #india   #Tamilnadu   #Tamilarul.net

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.