முதல்வர் என்ன வேண்டுமானாலும் செய்வார்: அன்புமணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி, கெயில், பிபிஆர்எல், வேதாந்தா, உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் தமிழகத்தில் இரண்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்துக்குக் காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்படி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்டோபர் 27) டெல்டா பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்ககோரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் டெல்டா விவசாயிகளைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் இது விழித்துக்கொள்ள வேண்டிய நேரம், இல்லையெனில் நீங்கள் எல்லாம் அகதிகளாக மாற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த மண்ணை விட்டு உங்களை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது என்று விவசாயிகளைப் பார்த்து கூறிய அன்புமணி தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது குறித்து எடுத்துரைத்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு, 85 கிராமங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகக் காவிரி பாசன பகுதிகளில் 700 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அதில் 219 கிணறுகளில் கச்சா எண்ணெய்யும், இயற்கை எரிவாயும் எடுத்துக்கொண்டிருக்கிறாகள் என்று சுட்டிக்காட்டினார்.ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மீத்தேன், ஈத்தேன் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள நிறுவனங்களுக்குப் பிரதமர் மோடி உரிமம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அன்புமணி, இது விவசாயிகளுக்கு மிகப் பெரிய ஆபத்து. விவசாயிகளின் மண்ணை மத்திய மாநில அரசுகள் அழிக்க துடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
இங்கு நான் அரசியல் பேச வரவில்லை என்று கூறி தொடர்ந்து பேசிய அவர், கடலூரில் 25 கிராமங்கள், நாகையில் 20 கிராமங்கள் என 45 கிராமங்கள், அதாவது 57000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு பிடுங்கவுள்ளதாக குறிப்பிட்டார். இந்த மண்ணை அழிக்க ஒரு போதும் நாம் விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று கூறிய அன்புமணி, மோடி அரசுக்கு விவசாயிகள் பற்றி கவலையே கிடையாது, அவருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வாழ்ந்தால் போதும் என்று விமர்சித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், காவிரி வேளாண் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும். அதற்குத் தமிழக சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறெனில் இந்தப் பகுதியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது. விவசாயம் மட்டும்தான் செய்ய முடியும் என்றார்.
வெளிநாடுகளில் போடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் அந்தப் பகுதிகளில், கடல் அலை உள்வாங்கியிருக்கிறது, நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது, மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எச்சரிக்கை விடுத்தார். ஸ்டெர்லைட் மற்றும் வேதாந்தாவுக்கு 700 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது வேதாந்தா நிறுவனத்துக்குக் கடல் பரப்பில் கிணறுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். என்றார்.முதன் முதலில் அழகிரி அமைச்சராக இருந்த போது பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு அனுமதி வழங்கியதே திமுக தான் என்று தெரிவித்த அன்புமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று கூறினார்.
Powered by Blogger.