“தோற்றாலும் திமுகவிடம்தான் தோற்கணும்”- எடப்பாடி

“அதிமுகவின் தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தவிர முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி என மிகக் குறைந்த அளவில் மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு மட்டுமே அழைப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது.

முதலில் கே.பி.முனுசாமி பேசியிருக்கிறார். ‘18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பில் நீதிமன்றம் சொன்னது நமக்கு சாதகமாக இருந்தாலும் அதை மட்டுமே வைத்துக்கொண்டு நாம சந்தோஷப்பட்டுவிட முடியாது. அடுத்து இடைத் தேர்தல் என்று வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் இனி நம் யோசனை இருக்க வேண்டும். இந்த 18 பேரோட தொகுதியிலும் எந்த வேலைகளுமே நடக்கவில்லை என்ற கோபம் மக்களுக்கு இருக்கும். அந்தக் கோபம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதுதான் திரும்பும். நிச்சயமாக அவங்க கட்சியில் 18 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அவர்களாகவேதான் இருக்கும்.

நாம அந்த 18 தொகுதிக்கும் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்யணும். அப்படி நாம நிறுத்தும் நபர் கட்சிக்காரங்ககிட்டயும் சரி, பொதுமக்கள்கிட்டயும் சரி அதிருப்தி இல்லாத ஆளா இருக்கணும். அப்படி ஒருவரை நிறுத்தினால்தான் நாம தைரியமாகப் போய் ஓட்டுக் கேட்க முடியும். வேட்பு மனு தாக்கல் செய்து அதுல இருந்து ஒருத்தரை செலெக்ட் பண்றதெல்லாம் இருக்கட்டும். ஆனால், அதுக்கு முன்னாடியே 18 தொகுதியிலும், ஏன், 20 தொகுதியிலும் யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என்பதை நாமே விசாரித்து தெரிந்து வைத்திருக்கணும். அப்போதான் சரியான வேட்பாளரை நம்மால் அடையாளம் காண முடியும்.

500 பேரு ஒரு தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தாலும், நாலு பேரை மட்டும் அம்மா கூப்பிடுவாங்க. அந்த நாலு பேரு யாரு என்பதை முதல்லயே ரிப்போர்ட் அடிப்படையில் முடிவு பண்ணியிருப்பாங்க. அப்படி நாமும் ஒரு தொகுதிக்கு 4 பேரை முன் கூட்டியே முடிவு பண்ணி வெச்சிருக்கணும். அதேபோல நாம முன்னாடியே பேசி முடிவு செய்தது போல ஒரு தொகுதிக்கு நான்கு பொறுப்பாளர் என்பதை உடனடியாகவே அறிவிச்சுடணும். அவர்களை இன்றிலிருந்தே களத்தில் இறங்கி வேலை பார்க்கச் சொல்லணும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தொகுதியைப் பற்றிய அத்தனை விவரங்களும் அந்த 4 பொறுப்பாளருக்கும் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் இப்போ இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க முடியும்’ என்று சொன்னாராம்.

அவர் பேசி முடித்த பிறகு பன்னீர் பேசியிருக்கிறார். ‘அண்ணன் முனுசாமி சொன்னது நிஜம்தான். தேர்தலுக்கு நாம தயாராக இருக்கணும். எந்த நேரத்தில் அறிவிப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலும் சக்தியும் நமக்கு இருக்கணும். தேதி அறிவிச்ச பிறகு ஆட்களை தேடிட்டு இருக்க கூடாது. நாங்க எல்லாம் பேசி முடிவு பண்ணி 20 தொகுதிக்கும், பொறுப்பாளர்களை நியமிச்சிருக்கோம். அந்த அறிவிப்பு இன்று வந்துடும். இதில் 31 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆலோசனைப்படிதான் அந்தந்த தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு நடக்கும். இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் உடனடியாக அந்தந்தத் தொகுதிக்கு சென்று தேர்தல் வேலைகளை கவனிக்கும்படி அறிவுறுத்தப் போறோம்.

ஒவ்வொரு தொகுதிக்கும் பூத் வாரியாக, வார்டு வாரியாக வாக்காளர்கள் யாரெல்லாம் இருக்காங்க என்பதை இந்த பொறுப்பாளர்கள் அப்டேட்டாக வைத்திருக்கணும். எல்லா வாக்காளர்களின் போன் நெம்பரும் வாங்கிடுங்க. அவங்க எல்லோருக்குமே நீங்க வாங்கி முடிச்சதுல இருந்து தொடங்கி தினமும் நம் ஆட்சியின் சாதனை பற்றி மெசேஜ் அனுப்பவும் ப்ளான் பண்ணியிருக்கோம். தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் நிர்வாகிகளை நியமிச்சுடுங்க. அவங்களோடு நீங்க நேரடி தொடர்புல இருங்க. வார்டுக்கு நியமிக்கும் பொறுப்பாளர்களை தினமும் வீடு வீடாகப் போய் மக்களுடன் பேசி, நட்பாக சொல்லுங்க. அப்போதான் மத்தவங்க என்ன செய்யுறாங்க... நாம என்ன செய்யணும் என எல்லாம் தெரியும். நாம செய்வதை விட, மத்தவங்க செய்வதை கவனமாக பார்க்கணும். அதுதான் ஜெயிக்கிறதுக்கான வழி...’ என்று பேசி முடித்திருக்கிறார் பன்னீர்.

அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினாராம். “20 தொகுதியிலும் நமக்குப் போட்டி என்பது திமுகவாகத்தான் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தினகரன் நமக்குப் போட்டியாக இருக்கக் கூடாது. 20 தொகுதிகளில் நாம எத்தனை தொகுதியில் தோற்றாலும் அது திமுகவிடம் தோற்பதாகத்தான் இருக்க வேண்டும். ஒரு இடத்திலும் அவங்க முன்னாடி வந்துடக் கூடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் பலர் நம்மகிட்ட வர ரெடியாக இருக்காங்க என்று எனக்கு தகவல் வந்துட்டே இருக்கு. ஒருவேலை அவங்க வந்துட்டாங்கன்னா, அவங்கதான் அந்த தொகுதியின் வேட்பாளராக இருக்கும். இல்லன்னா மட்டும்தான் நாம புது ஆளைத் தேடணும். அவங்க 20 தொகுதியில் ஒன்றில்கூட ஜெயிக்கக் கூடாது.

இதுதான் நமக்கு அரசியலில் வாழ்வா சாவா என்பதை நிரூபிக்கப் போகும் தேர்தல். அதை மனசுல வெச்சு எல்லோரும் வேலை பார்க்கணும். யாராவது அவங்ககூட ரகசியக் கூட்டணி வெச்சிருக்கீங்க எனத் தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை யாரும் மறந்துட வேண்டாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.