ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுகிறது!

நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து திமுக பயப்படுவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, அதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து நிர்வாகிகளை நியமித்துவருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிடாது” என்பன உள்பட பல்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை விமர்சிக்கும் வகையில் முரசொலி பத்திரிகையில், ‘ ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.... மே.... மே....’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் குறித்த கட்டுரைக்கு அக்டோபர் 28 ஆம் தேதி முரசொலி பத்திரிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதைப் புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது, ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று (அக்டோபர் 29) சந்தித்தார். அப்போது, அதிமுக அரசு மீனவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் நல்வாழ்வுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும், 1000 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், முதல்வர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, எந்தவித விசாரணையாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே முதல்வர் கூறியிருக்கிறார். இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. தவறு செய்யாத நிலையில் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வழக்கை எதிர்கொள்ள முதல்வரும், அரசும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிக்கு அதிகபட்சமான தண்டனை பெற்றுத் தர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இலங்கையில் ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது, தொடர்பான கேள்விக்கு, ”மத்திய அரசு இலங்கையின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஒரு இனத்தையே கொன்று குவித்த இனப்படுகொலையாளர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, அவருக்குக் கொலை குற்றத்துக்கான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு,. எனவே இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பின்பற்றுவோம்” என்று கூறினார்.

தற்போதுள்ள ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவது நிச்சயம், அப்படி வந்தால் ஊழல் அமைச்சர்கள் எல்லாம் சிறைக்கு செல்வது உறுதி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ”2021ஆம் ஆண்டு வரை ஸ்டாலின் இதையேதான் கூறுவார். 2021 தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சிக்கும் வரும். இலவு காத்த கிளியாக ஸ்டாலினும், வால் அறுந்த நரியாகத் தினகரனும் உள்ளனர் ”என்று விமர்சித்தார்.

ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதே என்ற கேள்விக்கு, ஒரு பத்திரிக்கையில் வந்த கருத்துக் கணிப்பை வைத்துக்கொண்டு பேசக் கூடாது. யார் ஊழல், செய்தார்கள், யார் செய்யவில்லை என்பதை ஆராய்ந்து மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ரஜினிகாந்தைப் பார்த்து திமுக பயப்படுவதால்தான், முரசொலியில் ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் என்ற கட்டுரையை வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். கமல் பாறை மீது ஊறும் எறும்பைப் போன்றவர் . மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட்டால் 2 சதவிகித ஓட்டு மட்டுமே பெறும் “என்று தெரிவித்தார். அதிமுகவின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி சில கருத்துகள் பரப்பப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எல்லாத் தலைவர்களையும் விமர்சிக்கக் குழுக்கள் இருப்பதாகவும், தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட அமமுக தகவல்தொழில் நுட்பப் பிரிவின் மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.