மஹிந்த அணியுடன் இணைய போவதில்லை என்கிறார் சாள்ஸ்!

மஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதற்கான தீவிர முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மறுத்துள்ளார்.


குறித்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுக்கும் முடிவே எனது முடிவு. என்னைக் குறித்து வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

மஹிந்த அணியுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்பை கைப்பற்றிக்கொள்ள தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவே குறித்த தவறான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தற்போதுள்ள இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தவுள்ளது. எனவே இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Nirmalathan #Mahinda #Mannar
Powered by Blogger.