நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஊழல்வாதிகளை பாதுகாக்க பயன்படுகின்றது: ஜே.வி.பி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஊழல்வாதிகளை பாதுகாக்க பயன்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

20ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் எனும் தொனிபொருளில் இன்று(சனிக்கிழமை) கிளிநொச்சியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கிளிநொச்சி சந்தையில் குறித்த துண்டுபிரசுரங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரால் விநியோகிக்கப்பட்டன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கள், குறித்தும் 20ஆம் திருத்த சட்டத்தினை கொண்டு வருவதன் நோக்கம் தொடர்பிலும் இதன்போது பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வின் போது கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போது எங்கும் ஊழல்கள் நிரம்பி வழிகின்றன. மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது.

ஆனால் அதன் பிரதான ஊழல்வாதியை கைது செய்ய முடியாமல் பொலிஸார் தடுமாறுகின்றனர். இலங்கையில் மாறிமாறி வந்த ஆட்சிகாலங்களில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதை ஜனாதிபதி தடுத்து வருகின்றார். ஆதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஊழல்வாதிகளை பாதுகாக்க பயன்படுகின்றது.

கடந்த 10 வருடங்களாக ஜனாதிபதி ஊழியர்கள் படையணியின் பிரதானிகளும், ஜனாதிபதியின் செயலாளர்களும் ஊழலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.

ஆகவே இந்த நிறைவேற்று அதிகார பதவி ஊழல் மிக்கது ஆகவேதான் இதனை இல்லாதொழிக்குமாறு நாம் கோருகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.