மட்டக்களப்பில் விகாராதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதியின் செயற்பாட்டைக் கண்டித்தும் அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியும் செங்கலடி நகரில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்களின் ஏற்பாட்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரதேச செயலக ஊழியர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பிரதான வீதி ஊடாக செங்கலடி சந்திவரை சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.

கடந்த செவ்வாய்கிழமை, மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள தனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியமைக்கு மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்லரட்னத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அம்பிடியே சுமணரெத்த தேரர் பிரதேச செயலாளரை பொலிஸார் முன்னிலையில் தாக்குவதற்கு முயற்சி செய்தார்.

இதையடுத்து பிரதேச செயலாளர் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். எனவே தேரரின் இச்சம்பவத்தினைக் கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நீதியை நிலைநாட்டும் நல்லாட்சியில் ஏன் இந்த பாகுபாடு, அரச இயந்திரத்தை சீர்குலைக்காதே, வன்முறையைப் பிரயோகிக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், அரச உத்தியோகத்தர்களை சுதந்திரமாக கடமையைச் செய்ய விடு, சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் நிறுத்து, மக்கள் சேவைக்கு மதிப்பளி, அரச உத்தியோகத்தர்களுக்கு இந்நிலை என்றால் மக்களுக்கு? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். No comments

Powered by Blogger.