அனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம்?

அரசியல் நோக்கங்களுக்காக வாகன அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அத்தோடு 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு தனக்கு தகுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சருக்கு வானமொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக கடந்த வாரம் அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து  முதலமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வட. மாகாணசபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறக்குமதி தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப்பத்திரங்களினூடாக 40,000 அமெரிக்க டொலருக்கு குறைவான வாகனமொன்றை தீர்வை நீக்கி இறக்குமதி செய்து பயன்படுத்த முடியும்.

முதலமைச்சர் என்ற வகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவனாக இருந்தபோதும், எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கு இந்த அனுமதிப்பத்திரம் தரப்பட்டிருந்தது.

அதன்பின்னர் தற்செயலாகவே, முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப்பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், முதலமைச்சர் என்ற வகையில் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு தனக்கு தகுதியுள்ளது.

இதன்காரணமாக, முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்து, எனது பதவிக்கு உரித்தான தீர்வை வரி நீக்கிய அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

எனினும், இந்தக் கோரிக்கை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அது அமைச்சர் மங்கள சமரவீரவினால் நிராகரிக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன்.

இது எனக்கான சட்டப்படி உரித்து என்பதை வலியுறுத்தி, அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கூறி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும்” சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பான விமர்சனங்கள் குறித்து ஆராயுமிடத்து, அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

#முதலமைச்சர்  #சி.வி.விக்னேஸ்வரன்  #மங்கள_சமரவீர   #அறிக்கை  #தீர்வை #வரி #jaffna  #srilanka  #tamilnews

No comments

Powered by Blogger.