புனர்வாழ்வின் கீழ் விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகள் சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை!

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை புனர்வாழ்வின் கீழ் விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகள் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் வவுனியாவில் நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீராகாரம் மாத்திரமே அருந்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு புனர்வாழ்வு மட்டுமே வழங்கப்படவேண்டும் எனவும் வேறு எந்தவிதமான தீர்வுகளும் தங்களுக்கு தேவையில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

சில ஊடகங்களில் தங்களுடைய வழக்குகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அவ்வாறு இல்லை தங்களுடைய ஒட்டுமொத்தமான கோரிக்கை புனர்வாழ்வு ஒன்றே என அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய வந்த அல்லது கொல்ல சதி செய்த நபரை பொலனறுவையிலே பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். ஆகவே தங்களையும் அவ்வாறு ஜனாதிபதி பொதுமன்னிப்பினூடாக புனர்வாழ்வு ஒன்றினை பெற்றுத்தந்து விடுக்க வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியுள்ளதாக’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.