அக்டோபர்.5க்குள் கரை திரும்ப எச்சரிக்கை!

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதால் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக உள்தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய பெருமழைக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளது. இதனால் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 6ஆம் தேதி முதல் தென் கிழக்கு வங்கக்கடல், கேரளாவை ஒட்டியுள்ள கடற்பகுதி மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ. மழையும், பரமக்குடி, விளாத்திகுளம், இரணியல் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.