50,000 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4000 பேருக்குக் கூடுதலாக குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர், வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் தங்களுடைய நாடுகளை விட்டு, இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தங்களது சொந்த நாட்டை விட்டு, அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்பவர்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது அமெரிக்க குடியுரவுத் துறை.
இதுகுறித்து, அமெரிக்க குடியுரவுத் துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கடந்த ஆண்டு மட்டும் 50,802 இந்தியர்களுக்கு அமெரிக்கா குடியுரிமை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 46,188 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்து 7 ஆயிரத்து 265 பேருக்குக் கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 1 லட்சத்து 18 ஆயிரத்து 559 பேருக்குக் குடியுரிமையை வழங்கியுள்ளது அமெரிக்கா.
இதில், இந்தியா இரண்டாவது இடத்திலும், சீனா, பிலிப்பைன்ஸ், கியூபா உள்ளிட்ட நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. குடியுரிமை பெற்ற இந்தியர்களில் பெரும்பாலானோர் கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் மாகாணங்களில் குடியேறி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு(2017) மட்டும் சுமார் 6.85 கோடி பேர் தங்களது சொந்த நாடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக கடந்த ஜூன் மாதம் ஐநா சபை தகவல் வெளியிட்டது. இதில் இந்தியாவில் இருந்து 7,000 பேர் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்துள்ளதாக ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.