சபரிமலை சென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

ஐயப்பனை சபரிமலை கோயிலுக்கு சென்று பெண்கள் வணங்க விரும்பினால் நிச்சயமாக விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் டாக் ஆஃப்தி டவுனாக இருப்பது இரண்டு பெண்கள் சபரிமலை கோயில் சன்னதியை நெருங்கியது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட நடிகர் சிவகுமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.
வடபழனியில் இன்று (அக்டோபர் 19) திரைப்பட பாடல்பதிவு நிலையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவக்குமார், “பெண்களுக்கு அரசாங்கம், சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. சந்தோஷமாக போகட்டும். விஷேச நாட்களை விட்டு வேறு நாட்கள் போனால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மகரவிளக்கு போன்ற நாட்களில் செல்லும் போது அந்த கூட்டத்தில் பெண்களுக்குத் தனியே பாதுகாப்பு இல்லை. ஆண்களே நசுங்கி பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
சபரிமலை இல்லை எந்த கோயிலுக்கும் நான் போக மாட்டேன். கடவுள் நம்பிக்கையில்லை அங்க போய் எதற்கு கன்னா பின்னான்னு மிதிபட்டு சாகனும். ஐயப்பனை வீட்டில் வைத்து கும்பிட்டா சாமி கோச்சுக்குவாரா. உங்களுக்குப் பொழுது போகவில்லை என்று போகிறீர்கள். போனீங்க என்றால் விளைவை நீங்கள் தான் சந்திக்க வேண்டும்” என்றார்.
மேலும் சமீபத்தில் திரைப்பிரபலங்கள் விடுக்கும் பல்வேறு பாலியல் புகார்கள் குறித்த கேள்விக்கு, “பண்டைய காலம் முதலே பெண்கள் மீதான தொந்தரவுகள் இருந்து வருவதாகவும், #MeToo போன்ற விவகாரத்தில் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை நடந்தாலும், நடக்காவிட்டாலும் பொதுவெளியில் வெளிப்படுத்துவது அநாகரிகமானது, அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்” என்றார்.

No comments

Powered by Blogger.