யாழில் மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் கொல்லப்பட்டார்!

யாழ்ப்பாணத்தில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற தாயே கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் வீதியில் சென்றுகொண்டிருந்த போது, ஏனைய சில இளைஞர்கள் அவருடன் முரண்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் வீட்டுக்கு எட்டு பேர் கொண்ட குழுவொன்று, மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் சென்றுள்ளது.

இதன்போது அந்தக் கும்பல் தடிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது வீட்டில் இருந்த இளைஞனின் தாயார் தனது மகனை காப்பாற்ற முயன்றபோது, தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மகனும் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் படுகாயமடைந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Powered by Blogger.