விடுதலை எனும் அஞ்சலோட்டம்..!

(ஈழப்பிரியன் பாலா)
முன்நாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் நேற்றயதினம் ஆரம்பித்த புதிய கட்சி, தமிழ் அரசியல்பரப்பில் பல வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

கூட்டமைப்பு மற்றும் அவரை அவரது ஆட்சியின் வினைத்திறனின்மைக்காக இதுகாறும் விமர்சித்தவர்கள் பக்கமிருந்து வருகின்ற வாதப்பிரதிவாதங்கள் ஏலவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதுபற்றி பேசுவதல்ல இப்பதிவின் நோக்கம்.
அவரை தமிழ்தேசிய அரசியலிற்கு மிண்டு கொடுப்பவராக உணர்ந்து, அவரை கொணர்ந்த கட்சியே அவரிற்கு தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது அவரை அவ்வெதிர்ப்புக்களிலிருந்து காத்துக்கொண்டிருந்த, விடுதலைப்புலிகளின் கொள்கைகளின் நீட்சியாக நோக்கப்படும் தமிழ்தேசிய அரசியலில் விடாப்பிடியாக இருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பக்கத்திலிருந்துவரும் சலசலப்புகளைப் பற்றி ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
இச்சலசலப்பிற்கான முக்கிய காரணம் ததேமமு உடன் எழுதப்படாத ஒப்பந்தத்தில் இயங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலின் முன்னதான இந்தியப் பயணமும் அங்கிருந்து திரும்பிய பின்னர் தேர்தலிற்கு சில நாட்களே இருந்த நிலையில் அவரது கட்சி நடந்து கொண்ட முறைகளுமே ஆகும்.
இந்தியாவிலிருந்து திரும்பிய சுரேஷ் இறுதி நேரத்தில் சங்கரியுடன் கூட்டணி அமைத்தது ததேமமுணியை மிகவும் சங்கடத்தினுள் தள்ளியது. ஈபிஆர்ல்வ் உடன் கூட்டணியென்பதால் பல இடங்களில் ததேமமு வேட்பாளர்களையே நியமிக்கவில்லை. அவ்வாறான இடங்கள் ஈபிஆர்ல்வ் போட்டியிடுவதற்கான இடங்களாக அடையாளப்பட்டிருந்தது. இது ததேமமு யாழ்ப்பாண மாவட்டக்க்கட்சி என்று எதிராளிகளால் விமர்சிக்கப்படும் அளவிற்கு இட்டுச்சென்றிருந்தது.
ஏலவே ஈபிஆர்ல்வ் இனது ஹிந்தியத்தொடர்புகள் குறித்து திரு கஜேந்திரகுமார் அவர்கள் அவதானமாக இருந்தாலும் இறுதிநேரத்தில் சுரேஷ் நடந்து கொண்ட முறைமை, கஜேநந்திரகுமார் அவர்கள் சுரேஷ் மீது வளர்த்துக்கொண்ட நம்பிக்கையை தலைகீழாக மாற்றியது.
சுரேஷ் அவர்களது இச்செயல் உண்மையில் கஜேந்திரகுமார் அவர்களை கடும்கோபத்திற்கு உள்ளாக்கியது.
உண்மையில் என்ன நடந்தது என்பது சுரேஷிற்கு மட்டுமே வெளிச்சம் என்றபோதிலும், வாக்கெடுப்பு நடைபெறமுன்னரான சுரேஷினது இந்தியவிஜயமும் அணிமாற்றமும் சுரேஷ் ஹிந்திய தாளத்திற்கு ஆடும் ஒருவராகவும் தமிழ்த்தேச அரசியலை மேற்கொண்டுசெல்ல நம்பப்படமுடியாத மனிதாரகவே இனங்காட்டியது.
தேர்தலின்பின்பாக வவுனியாவில் சிங்களக்கட்சிகளுடன் கூட்டணியமைத்தது இந்நம்பிக்கையீனத்திற்கு அணிசேர்ப்பதாகவே இருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே விக்னேஸ்வரன் அவர்கள் ஈபிஆர்ல்வ் உடன் கூட்டணி அமைத்தது ததேமமுயினரால் நோக்கப்படுகின்றது.
ஆனால் ததேமமு எதிர்பார்க்கும் தூய்மைவாதம் புலிகளோடு முடிந்து போனவொன்று. எனவே விடுதலை எனும் அஞ்சலோட்டத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் நீண்டநாள் நண்பர்கள் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும்.
எனவே தூய நண்பர்கள் எனும் மாயமான்களிற்காக் காத்திருக்காமல் வருகின்ற வழிப்போக்கர்கள் துரோகிகள் நயவஞ்சகர்கள் என்று பலவிதமானோரையும் சேர்த்துக்கொண்டு எவ்வாறு விடுதலைநோக்கிப் பயணிப்பது என்பதை ததேமமு சிந்திக்கவேண்டும். இதுவே இராஜதந்திரம். இதுவே விடுதலையின் வழியென்றாகிவிட்டது.

No comments

Powered by Blogger.