அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்காலத்தில் இழக்க நேரிடும்!

அரசாங்கத்தின் திட்டங்களினூடாக மக்கள் முழுமையாக பயன்பெற வேண்டும். இல்லையேல் அத்திட்டங்களை மக்கள் இழக்க நேரிடும் என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான நிதி உதவியும், விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் மாகாண சபையினால் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை மக்கள் முறையாக பயன்படுத்தாததன் காரணமாக இம்முறை அத்தொகை 60 மில்லியன் ரூபாயாக குறைவடைந்துள்ளது.

அரசாங்கம் திட்டங்களை நடைமுறைபடுத்தும் போது அதனை மக்கள் வரவேற்காவிட்டால் அது இல்லாது போய்விடும். எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை முறையாக மக்கள் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, அரசாங்க திட்டங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. ஐம்பது வீதம் அரசாங்கமும் மீதியினை பயனாளிகளும் செலுத்த வேண்டும். அப்போது தான் அதன் பெறுமதி தெரியும் எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்தால் அதன் பெறுமதி தெரியாது.

இது மத்திய மாகாணத்தில் பொருட்கள் வழங்கும் இறுதி நிகழ்வாகக்கூட இருக்கலாம். எனவே, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

அத்தோடு பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் அமைச்சின் கீழும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

#Arumugam   #srilanka  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.