துர்கா பூஜையும் பாலியல் தொழிலாளர்களும்!

மேற்கு வங்கம், பிகார், அஸ்ஸாம் மாநிலங்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று துர்கா பூஜை. இந்த பூஜையானது 5 நாட்கள், 10 நாட்கள் என வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின் வீதிகளில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா தேவி சிலைகளுக்கு நாள்தோறும் வழிபாடு நடத்தப்படும். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பந்தல்களுக்கு மேற்கு வங்க அரசு பரிசுகளையும் வழங்குகிறது.

துர்கா பூஜை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு வடிவ துர்கா சிலைகள் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கப்படும். இரவும் பகலுமாக இந்த சிலைகள் உருவாக்கும் பணி பயபக்தியுடன் நடைபெறும்.

சிறியது முதல் பெரியது வரையிலான பிரம்மாண்ட சிலைகள் உள்நாட்டுக்காகவும் வெளிநாட்டுக்காகவும் தயாரிக்கப்படும் இடம்தான் குமோர்துலி. கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில்தான் பாரம்பரியமாக சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

துர்கா பூஜை சிலைகளை உருவாக்கும் பணியை தொடங்குவதற்கு முன்னதாக சிற்பிகள் (குயவர்கள்) பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வீடுகளுக்குத்தான் செல்வார்கள். அவர்கள் வழிபட்டு எடுத்து தரும் மண், கங்கை நதிக்கரை களிமண், மாட்டு கோமியம், மாட்டு சாணம் இவற்றை கலந்த கலவையைக் கொண்டுதான் துர்கா தேவி சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

பாலியல் தொழிலாளர்களிடம் மண்ணைப் பெறாமல் துர்கா தேவி சிலையை எந்த ஒரு குயவரும் உருவாக்க மாட்டார்கள். அப்படி செய்யப்படும் சிலைகள் முழுமை அடைந்ததாகவும் கருதமாட்டார்கள்.

சிலை தயாரிப்பில் மட்டுமல்ல. துர்கா தேவியை வைத்து வழிபாடு நடத்தப்படும் பந்தல்களிலும் கூட இந்த பாலியல் தொழிலாளர்களுக்கு மிகவும் மரியாதை அளிக்கப்படும்.

ஆண்டுதோறும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் துர்கா தேவி பூஜை காலத்தில் தெய்வத்துக்கு இணையாக கொண்டாடப்படுகின்றனர்.

மா.ச. மதிவாணன்

No comments

Powered by Blogger.