நிர்மலா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி!

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கைதானார்.

நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இவர்கள் மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி நிர்மலா தேவி மற்றும் முருகன் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்னிலையில் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கினை கீழமை நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை செய்து விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.

No comments

Powered by Blogger.