சர்வதேசத்தை காட்டி தமிழர்களை ஏமாற்றியது போதும்-ஞா.கிருஸ்ணபிள்ளை

சர்வதேசத்தை காட்டி மக்கள் பலத்தை சம்பாதித்தது போதும். இனியேனும் தமிழ் மக்களின் வாழ்வை வளம்பெறச் செய்ய ஒன்றிணைவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, தமிழ் தலைமைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் தலைமைகளை நம்பி எமது தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றார்கள். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வை இன்னும் பெற்றுக் கொடுத்ததாக இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வை 2016இல் பெற்றுத்தருவோம், 2017இல் பெற்றுத் தருவோம், 2018இலே பெற்றுத்தருவோம், தீபாவளிக்குப் பெற்றுத் தருவோம், தைப்பொங்கலுக்குப் பெற்றுத்தருவோம், என்றார்கள்.
ஆனால் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தலைமைகள் நம்பியிருக்கின்ற ஜனாதிபதி ஜெனீவா சென்று எமது நாடு சுதந்திர நாடு, எமது நாட்டுப் பிரச்சினையில் எவரும் தலையீடு செய்யக்கூடாது உள்நாட்டுப் பிரச்சனையை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
எனவே, இனிமேலும் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்து தமிழ் மக்களிடத்தில் வாக்குக் கேட்காமல். தமிழ் மக்களை வாழ வளம்பெற, வளர்ச்சிபெறச் செய்வதற்கு தமிழ் இனத்தைச் சேர்ந்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.