கூட்டமைப்பு சர்வதேசத்தின் தீர்வை நோக்கியே பயணமாம்??

நம்மை நாமே ஆளும் தீர்வினை சர்வதேசம் தருவதற்கான முயற்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து நிருபித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10 ஆவது தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நாளில் கட்சியின் தலைவராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது உரையாற்றிய அவர், “கடந்த மூன்று ஆட்சிக்காலத்தில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவரும் நிலையில் அது ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துடன் இருந்து எதனைச்செய்யப்போகின்றீர்கள் என மக்கள் எங்களிடம் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த அரசாங்கம் ஏமாற்றும் என்ற நிலை இருந்தாலும்கூட சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக இதனை நாங்கள் கொள்ளமுடியும். நாங்கள் அரசாங்கத்தினை எதிர்த்து நின்றுகொண்டிருந்தால் ஒரு தீர்வு விடயத்தில் இவர்கள்தான் எதிராக நிற்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டினை சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் காட்டமுனையலாம்.

இந்த காலகட்டம் தமிழ் மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தமது கட்சியினை வளர்ப்பதற்குமான காலமாக இருப்பதனால் அதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

எதற்காக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடினோமோ அதனை அடைவதற்கு இன்று அரசியல் ரீதியாக போராடிவருகின்றோம். எந்த காலத்திலும் இந்த அரசாங்கத்திற்கோ வேறு யாருக்கோ அடிபணிகின்ற அடிவருடிகளாக எமது கட்சி இருக்கவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் அவர்களை தொடர்ச்சியாக ஆதரித்துவந்துள்ளோம் என்பதற்காக இந்த அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துவிட்டோம் என யாரும் கருதிவிடக்கூடாது.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம். சர்வதேசம் நாங்களே எங்களை ஆளக்கூடியதற்கான தீர்வினை தருவதற்கான முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும்” என்று தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.