தாய்மை..!

முலைப்பால் ஈந்து உடலில்
    உதிரத்தை ஓடச் செய்து
அலையெனவே ஓயாத பாசத்தை
    சேய்மேல் நிதமும் பொழிந்து
விலையில்லா இன்பம் தந்து
    இன்னலின் விழிநீர் துடைத்து
தலைகாக்கும் இறையின் உருவே
    தாய்மை எனும் பெண்மை.

வலிகள் பெற்று உயிர்களை
    குவலயம் அனுப்பி மகிழ்ந்து
கலிகள் பல சூழ்ந்திடவும்
    கண்ணீர் அடக்கி மகவு
நலிவடையா வண்ணம் பேணிக்காத்து
    நற்பெயர் வழங்கி-கனவுகள்
பலிதமாகவென வெற்றிக்காக போராட்டம்
    செய்வதும் வலிய பெண்மை.

அழும் வேளைதனில் அழகிய
    மழலையை மார்போடு தூக்கி
தழுவி அணைத்து சிரிப்பை
    பரிசாக உவந்து அளித்து
பழுதிலா அன்பு செய்வதும்
    விழுந்திடும் போது தருவென
எழுவென ஊக்கம் தருவதும்
    கருச்சுமந்த அருமைத் தாய்மை.

                 மோகனன்
Powered by Blogger.