சிவாஜி கணேசன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அவரது திரு உருவப் படத்துக்கு மரியாதை!

தமிழ் சினிமாவை தனது நடிப்பால் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் சிவாஜி கணேசன். இன்று அவரது 91ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அவரது திரு உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சிவாஜி கணேசன் சிலைக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிவாஜியின் குடும்பத்தினரான பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டு சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் கீழே பொறிக்கப்பட்ட கலைஞரின் பெயரும் நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த விவகாரம் குறித்து பேசினார்.

“சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அதிமுக அரசு தான். நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில் இருந்த சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும், தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொது நல வழக்கு தொடர்ந்ததாலேயே நீதிமன்றம் அதை அகற்ற உத்தரவிட்டது. மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அது பற்றி அரசு பரிசீலிக்கும்” என்று கடம்பூர் ராஜு கூறினார்.

நடிகர் பிரபு பேசும் போது, “சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கலைஞரின் பெயரைப் பொறிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தரப்பில் அதைப் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்” என்று கூறினார்.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, அய்யா நடிகர் திலகத்தின் பிறந்த நாள். அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் ஒருவனாய்... என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.