சபரிமலை செல்வேன்- அதிதி பாலன்!

"உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், மீண்டும் சபரிமலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது'' என, அருவி பட நாயகி அதிதி பாலன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நேற்று (செப்டம்பர் 30) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அதிதி பாலனுக்குச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அதிதி, “ஈரோட்டிற்கு முதல் முதலாக நான் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த அருவி படம் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. வக்கீலுக்கு நான் படித்திருந்தாலும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நாடகத்தில் நடிக்க முயற்சி செய்துவந்தபோது, அருவி திரைப்பட வாய்ப்பு வந்ததால் நடிக்கத் தொடங்கிவிட்டேன். என்னைச் சந்திப்பவர்கள் சமூக விழிப்புணர்வுப் படங்களில் நடிக்குமாறு கூறிவருகிறார்கள். அதற்கான கதையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
அருவி படம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு டாக்டர்களையும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் சந்தித்துக் கலந்துரையாடினேன். இதேபோல் திருநங்கைகளிடமும் பழகியுள்ளேன்.
கடந்த வாரத்தில், மூன்று முக்கியமான தீர்ப்புகளை, உச்ச நீதிமன்றம் அளித்தது. சட்டம் படித்தவள் என்கிற முறையில், இவற்றை வரவேற்கிறேன். அதில், 'சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம்' என்ற தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நானும் மூன்று முறை சபரிமலை சென்றுள்ளேன். இத்தீர்ப்பின் மூலம், மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் ஓரினச் சேர்க்கை குற்றம் கிடையாது. மண உறவுக்கு வெளியேயான உறவும் குற்றமில்லை போன்ற தீர்ப்புகளும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து சமுதாய விழிப்புணர்வுப் படங்களில் நடிப்பேன். தேவைப்பட்டால் வழக்கறிஞராகவும் பணியாற்றுவேன்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.