கோலியை அவுட்டாக்க இதுவே வழி: வாகர் யூனிஸ்

கிரிக்கெட் அரங்கில் எதிர் அணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வீரராக உருவெடுத்துள்ளார் விராட் கோலி. அவரது நேர்த்தியான பேட்டிங்கும் மன உறுதியும் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் அவருக்கு முதலிடத்தைப் பெற்றுதருகின்றன. இந்நிலையில் விராட் கோலியை அவுட் ஆக்குவதற்கு யோசனை கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாகர் யூனிஸ்.
குறைவான போட்டிகளிலேயே அதிகமான சதங்கள், அரை சதங்கள் அடித்து அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் கோலியை அவுட் ஆக்குவதற்கு சில வழிமுறைகளை வாகர் யூனிஸ் கலீஜ் டைம்ஸ் என்ற துபாய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு வீரர்களுக்கும் பலவீனம் இருக்கும். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், ஆடுகளத்திற்கு வந்த உடனேயே டிரைவ் ஷாட் ஆட விரும்புவார். விராட் கோலிக்கு பந்து வீசும் பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நேருக்குநேர் மோதலில் விராட் கோலியை வீழ்த்த முடியாது. உங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார்.
மேலும் தான் அவருக்குப் பந்துவீச நேர்ந்தால் என்ன மாதிரியான திட்டத்தை செயல்படுத்துவேன் என்பதையும் தெரிவித்துள்ளார். “நான் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி விராட் கோலியைவிட்டு பந்து விலகிச் செல்லும்படி செய்வேன். லெந்த் தூரத்திற்குச் சற்று முன் பந்தை பிட்ச் செய்து, அவரை டிரைவ் ஆட தூண்டுவேன். நீங்கள் ஒரு அவுட் ஸ்விங் பந்து வீச்சாளராக இருந்தால் இது சிறந்த திட்டம்” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.