ஸ்டீவ் வா மீது குற்றம் சுமத்திய ஷேன் வார்ன்

நான் இணைந்து விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாதான் மிகவும் சுயநலமான வீரர் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், தனது வாழ்க்கை வரலாறு குறித்த புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. அதில் 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4ஆவது டெஸ்டில் கேப்டன் ஸ்டீவ் வா தன்னை நீக்கியது குறித்து எழுதியுள்ளார்.
"நான் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாதான் மிகவும் சுயநலமான வீரர். அவர் தன்னுடைய பேட்டிங் சராசரி 50இல் இருக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருப்பார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், முக்கியமான கட்டத்தில் அவர் எனக்கு ஆதரவாக இல்லை. தேர்வுக் குழு உறுப்பினரான ஆலன் பார்டர் எனக்கு ஆதரவாக இருந்தார். வார்ன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றார். எனக்கு ஸ்டீவ் வா நண்பராக இருந்தபோதும் முக்கியமான தருணங்களில் நான் அவருக்கு உதவியபோதும் எனக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. நானும் அப்போது மோசமாக நடந்துகொண்டேன்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைச் சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு அவருடன் பழகுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். ஆனால் அவர் கேப்டன் ஆன பிறகு அப்படியே மாறிவிட்டார். அவர் என்னைத் தேர்வு செய்யாததால் இதைக் கூறவில்லை. நான் சரியாக விளையாடாவிட்டால் என்னைத் தேர்வு செய்ய வேண்டாம். ஆனால் பொறாமை காரணமாக அவர் என்னைத் தேர்வு செய்யவில்லை. நான் என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார். நான் சொன்னேன், நண்பரே, நீங்கள் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள் என்றேன்" இவ்வாறு தனது நூலில் ஸ்டீவ் வா குறித்து எழுதியுள்ளார் வார்ன்.

No comments

Powered by Blogger.