தமிழ் அரசியல் தலைவர்களின் புறக்கணிப்புகள் ஒன்றே அரசியல் கைதிகளின் விடுதலையை வலுப்படுவதும்

ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைவர்களின் புறக்கணிப்புகள் ஒன்றே அரசியல் கைதிகளின் விடுதலையை வலுப்படுவதும் என மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசில் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் நேற்று(சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில். “அரசியல் கைதிகளின் விடயம் தற்போது இலங்கை மட்டுமல்ல வெளிநாடுகள் மத்தியிலும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான எமது ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு விதமாக இடம் பெற்று வருகின்றது. உண்ணாவிரத போராட்டங்களாக, அகிம்சை வழி போராட்டம், கவனயீர்ப்பு போராட்டங்களாக இடம் பெற்று வருகின்றது.

இன்னொரு பகுதியில் அரசியல் வாதிகள் அனைத்து மேடைகளிலும், வெளிநாட்டு தூதுவர்களிடமும், அரசியல் கைதிகள் தொடர்பாக பல முறை பேசி விட்டார்கள். தற்போதும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இது வரை எமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்ததாக தெரியவில்லை. எனவே எமது கோரிக்கையை, எமது போராட்ட வழியை மாற்ற வேண்டும்.

குறிப்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் செல்லாது புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் அனைத்து அமர்வுகளையும் புறக்கணிப்பதன் மூலமும் எங்களுடைய எதிர்ப்பை காட்ட முடியும்.

ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைவர்களின் புறக்கணிப்புகள் ஒன்றே எமது போராட்டத்தை மேலும் வலுப்படுவதும் ஒன்றாக காணப்படும்.

எனவே அரசாங்கத்துடன் இணைந்து எல்லா விடையங்களிலும் பங்கு பற்றி விட்டு அரசியல் கைதிகளின் விடையம் தொடர்பாக பேசுவது ஒரு போதும் அவர்களின் விடுதலைக்கு உதவ போவதில்லை.

அதே நேரம் ஒட்டு மொத்தமாக அனைவரும் எமது புறக்கணிப்புக்களை ஒற்றுமையாக வெளிப்படுத்தும் போது நிச்சயமாக அரசியல் கைதிகளுக்கு சாதகமான விடயங்கள் இடம் பெரும் என நம்புகின்றேன்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.