விவசாயிகள் பேரணி பொலீசார் தாக்குதல்!

உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லியை நோக்கி பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (அக்டோபர் 2) பேரணி நடத்தி வருகின்றனர். பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் பேரணி நடந்தது. அதில் அம்மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றதன் பிறகு அப்பேரணி நிறைவுற்றது. தற்போது உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த மூன்று தொழில்சங்கங்களின் கூட்டமைப்பான பாரதிய கிஷான் சங்கத்துடன் சேர்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உபி- டெல்லி எல்லையில் அதிரடிப்படை போலீசார் விவசாயிகளை டெல்லிக்குள் புகாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அது முடியாததால், தடியடி நடத்தினர். தடுப்புகளை மீறியும் விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல முயன்றனர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாரதிய கிஷான் அமைப்பின் தலைவர் ராகேஷ் தெரிவிக்கையில்"எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இந்த பேரணி தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கும். நாங்கள் ஒரு போதும் நிறுத்திக்கொள்ள மாட்டோம்.நான்கு வருடம் இந்த அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்தோம்.இப்போது அதை குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

போலீசாரின் செயல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஏன் விவசாயிகளை தடுக்கிறீர்கள்?அவர்களை டெல்லிக்குள் அனுமதியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.