பொன்னாலையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

 பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொன்னாலை மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வே.தவமணி (வயது-70) என்ற பெண்மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர். கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்கவேண்டிய நிலை ஏற்படும் என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபப் பெண்ணொருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத் தலைவர் செ.றதீஸ்வரன், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர். 
#jaffna #ponnalai




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.